சென்னை

சிறுமியர்களுக்கு பாலியல் வன்முறை செய்ததாக கைது செய்யப்பட்ட ‘கிரானைட்’ வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு, முன்பு ஆதாரம் இல்லை என முடித்து வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வீரமணியுடன், அவரது தோழி சாந்தி (61), அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் (63) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, அப்போது சென்னை காவல்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த உயர் அதிகாரிகளிடம் எஸ்ஐடி கேள்விகள் எழுப்பி வாக்குமூலம் பெற்றுள்ளது. அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த கூடுதல் டிஜிபி அருண், கூடுதல் கமிஷனர்களாக இருந்த ஐஜி நிலை அதிகாரிகள் கண்ணன், ராதிகா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனராக இருந்த வனிதா ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் தரப்பு தகவலின்படி, முன்பு நடந்த போக்சோ விசாரணை எவ்வாறு கையாளப்பட்டது என்பது குறித்து அருணிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சிறுமியர் பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரிந்தும் புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியில் கண்ணன், ராதிகா, வனிதா ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல கோடி ரூபாய் கைமாறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை விரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பு வழக்கு முடிக்கப்பட்ட காலகட்டத்தில் வீரமணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் ரூ.147 கோடி மதிப்பிலான சொத்துகள் விற்கப்பட்டதாகவும், அதில் ரூ.40 கோடி வரை கைமாற்றம் நடந்திருக்கலாம் எனக் காட்டும் ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.