ரயில் பயணத்தின் போது ஹெட்போன் பயன்படுத்தாமல் மொபைல் போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், ரயில்களிலும் நிலையங்களிலும் சிலர் பாடல்கள், ரீல்ஸ்/வீடியோக்கள் பார்க்கவும், கேம்கள் விளையாடவும் சத்தத்தை அதிகமாக வைத்து பிற பயணிகளுக்கு தொந்தரவு அளிப்பதாக பல புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஜன விஷ்வாஸ் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவுகளின் அடிப்படையில், பொதுமக்களுக்கு தொந்தரவு தரும் செயல்களில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து கோட்டங்களுக்கும் தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து, நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஹெட்போன் இன்றி அதிக சத்தத்துடன் பாடல்/வீடியோ போன்றவற்றால் பிற பயணிகளுக்கு தொல்லை ஏற்படுத்தினால் ₹1,000 அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த அபராதத்தை டிக்கெட் பரிசோதகர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட வணிகப்பிரிவு அலுவலர்கள் வசூலிக்கலாம்.

மேலும், எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தொந்தரவு அளித்தால் அபராதம் ₹5,000 வரை உயர்த்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.