திமுக அமைப்பு சீரமைப்பில் மாவட்ட செயலர்கள் ஆதிக்கம் செலுத்தி, தங்களின் ஆதரவாளர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை சீரமைக்கும் நோக்கில் 19 குழுக்களை ஸ்டாலின் அமைத்தார். அவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாவட்டம், பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம் உள்ளிட்ட நிலைகளில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கட்சி அமைப்புகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், சில முன்னாள் அமைச்சர்களும் மூத்த மாவட்ட செயலர்களும் குழு பரிந்துரைத்தபடி ஒன்றியம் உள்ளிட்ட நிர்வாகங்களைப் பிரிக்காமல், புதிய பதவிகளுக்கு ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களை நியமிக்க ஏதுவாக அமைப்புகளைப் பிரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சில மாவட்ட பொறுப்பாளர்கள் உடன்பட்ட நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்து தலைமைக்கு புகார் அளித்ததாக தகவல்.

இதையடுத்து, அறிவாலயத்தில் சீரமைப்பு குழுவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் சிலரை அழைத்து ஸ்டாலின் எச்சரித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், குழு பரிந்துரைகளுடன் ஒப்பிட்டு பார்த்த பிறகே மாற்றங்களை ஏற்க வேண்டும் என மாவட்ட செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு கட்சி அலகுக்கும் வாக்காளர் எண்ணிக்கை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அமைப்பில் சுமார் 30 ஆயிரம் வாக்காளர்கள்; சென்னையில் 40 ஆயிரம்; பிற மாநகர பகுதிகளில் 30 ஆயிரம்; நகரத்திற்கு 40 ஆயிரம் என பிரிக்க வேண்டும் என கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி வட்டங்கள் 10 ஆயிரம் வாக்காளர்கள், பிற மாநகராட்சி வட்டங்கள் 5 ஆயிரம் வாக்காளர்கள் என்ற அளவில் பிரிக்க வேண்டும்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை உத்தரவிட்டதாக தகவல்.