சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) முடிவுகளில், சுமார் 1.10 லட்சம் பேர் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர்.
கட்டாய கல்வி உரிமை (RTE) சட்டத்தின் படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். மேலும், RTE அமலுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் டெட் எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஆசிரியர்களின் நலனுக்காக ஆண்டுக்கு மூன்று சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக ஜூலை 4, 5 தேதிகளில் சிறப்பு டெட் தேர்வு நடைபெற்றது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 58,902 பேர் எழுதினர்; பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளை 1,58,617 பேர் எழுதினர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில், பொதுப் பிரிவுக்கு 90, பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 75, எஸ்.சி./எஸ்.டி. பிரிவுக்கு 60 மதிப்பெண் தகுதி அளவாக நிர்ணயிக்கப்பட்டது.
முடிவுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டன. இதில் முதல் தாளில் 47,594 பேரும், இரண்டாம் தாளில் 60,732 பேரும் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 2,17,519 ஆசிரியர்களில் 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த ஐந்து நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் https://trb.tn.gov.in மூலம் தகுதி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.





