கொல்கட்டா: திரிணமுல் காங். தலைவர் மற்றும் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கொல்கட்டா இல்லத்துக்குள் கத்தியுடன் ஒரு பெண் நுழைய முயன்றதாகக் கூறி, அக்கட்சி போலீஸில் புகார் அளித்துள்ளது.
கட்சியின் விளக்கப்படி, தன்னிஷ்டா சாஹா என்ற பெண் நேற்று மாலை இல்ல வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். அங்கு இருந்த பாதுகாப்புப் படையினர் தடுத்தபோது, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மம்தாவின் உறவினர் எனக் கூறி ஆவேசமாக கத்தினார். மேலும் தகாத வார்த்தைகளில் பேசி, சாலையில் படுத்து அமளியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரில், மூன்று முறை முதல்வராக இருந்த மம்தாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அத்தகைய பாதுகாப்பு இருந்தும் போதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கத்தியுடன் எவ்வாறு இல்லத்துக்கு அருகே வர முடிந்தது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு தளர்த்தப்பட்டன என்பதையும் விசாரிக்க வேண்டும் என்றும், டில்லியில் பா.ஜ.க.க்கு எதிராக மம்தா தீவிரமாக செயல்பட்டு வருவதால் தாக்குதல் சதி இருக்குமா என்ற சந்தேகமும் எழுவதாகக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, பாதுகாப்பு மீறல் எவ்வாறு நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது.





