வாஷிங்டன்: அதிக விலையால் பாதிக்கப்பட்டுள்ள உலக சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து டீசல் வாங்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அவர், உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்துள்ளதாகவும், இறுதித் தீர்வை எட்டுவதற்காக உண்மையாகவே உதவி செய்து வருவதாகவும் கூறினார். மேலும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும், இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறிய டிரம்ப், இரு தரப்பும் போர் முடிவுக்கு வருவதைத்தான் விரும்புகிறார்கள் எனத் தாம் நினைப்பதாகவும் சொன்னார். ஆனால் அவர்களுக்கிடையேயான கடும் பகைமை காரணமாக போர் நிறுத்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது அவர்களுக்கு தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய டீசல் வாங்கும் முடிவு அமெரிக்காவின் சொந்த நலனுக்காக அல்ல; உயர்ந்த விலையால் பாதிக்கப்பட்டுள்ள உலக சந்தையை சமநிலைப்படுத்துவதற்காகவே என அவர் வலியுறுத்தினார்.