தூத்துக்குடி மாவட்டத்தில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை முன்னிட்டு விரதம் கடைபிடிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு மாலை மற்றும் காப்பு அணிந்து வந்ததைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் சர்ச்சை ஏற்பட்டது.
ஆத்தூரில் செயல்படும் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் ரஞ்சித் சிங் மாணவர்களிடம் மாலை, காப்புகளை அகற்றுமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. மறுத்த மாணவர் ஒருவரின் மாலையை தலைமையாசிரியரே கழற்றியதுடன், அந்த மாணவரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் பள்ளி முன் திரண்டு தரையில் அமர்ந்து அம்மன் பாடல்கள் பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள் தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அறிவுறுத்தலின் பேரில் போராட்டக்காரர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டார்; இருப்பினும் பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில், மத நம்பிக்கைகளை வேண்டுமென்றே அவமதித்ததாக தலைமையாசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக 90 பேர் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.





