வாக்காளர் பட்டியல் ‘எஸ்ஐஆர்’ (தீவிர திருத்தம்) காரணமாகத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, அமைச்சர் ஆதவ் அறிக்கை வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
அதில், எஸ்ஐஆரை ஆரம்பத்தில் எதிர்ப்பது போல காட்டிய திமுக, பின்னர் தேர்தல் ஆணையத்துடனும் பாஜவுடனும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டு, தமிழகத்தில் நடந்த திருத்தப் பணிகளை தங்களின் கட்டுப்பாட்டில் நடத்தினதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், களத்தில் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) மாநில அரசு ஊழியர்களாக இருந்தாலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் திமுக ஒன்றிய மற்றும் கிளைச் செயலாளர்களின் கைகளுக்கு சென்றதாகவும், எந்த அதிகாரி எந்த வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அன்றைய அமைச்சர்கள் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
எஸ்ஐஆர் பணிக்காக 7 லட்சம் பேரை களத்தில் இறக்கி செலவிட்டதாகவும், தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 74 லட்சம் பேர் நீக்கப்பட்டதாகவும், குறிப்பாக 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் குறிவைத்து நீக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். எஸ்ஐஆர் இல்லாமல் இருந்திருந்தால் தங்கள் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் கூறினார்.
திமுக செய்ததாக அவர் கூறும் எஸ்ஐஆர் தொடர்பான ‘சதி வேலைகளை’ உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வெளியிடுவோம் என்றும், விதிமுறைகளுக்கு மாறாகவும் ஜனநாயகத்திற்கு எதிராகவும் நடைபெறும் எஸ்ஐஆரை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அமைச்சர் ஆதவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





