ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து டில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் இருந்தபோது கடத்தல் அபாயம் இருக்கலாம் என்ற எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.

ஆமதாபாத் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, விமானம் தனிமைப்படுத்தி சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

விமானத்தில் இருந்த 306 பேரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், கடத்தல் அவசர குறியீடான ‘ஸ்குவாக் 7500’ சிக்னலை தாங்கள் அனுப்பவில்லை என்றும், விமானத்தின் செயல்பாடுகள் வழக்கம்போலவே இருந்தன என்றும் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்னல் அனுப்பப்படாத நிலையில் கடத்தல் அலாரம் எப்படி ஒலித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏடிசி அமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட சாப்ட்வேர் கோளாறு காரணமாக தவறான எச்சரிக்கை பரவியிருக்குமா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறால் தவறான சிக்னல் உருவானதா என்பதையும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.