புதுடில்லி: ஹார்வார்டு பல்கலையுடன் தொடர்புடைய கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 44 பேர், இந்தியாவின் அரசியல் சாசன அமைப்புகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடப்பதாகக் கூறி கவலை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நடைபெறும் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், கரப்பான் கட்சி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
44 பேரும் வெளியிட்ட திறந்த கடிதத்தில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி நம்பிக்கையை சீர்குலைப்பது ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ளனர். போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை என்றாலும், எதிர்மறை பரப்புரை மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் கவலைக்குரியவை என்றும் கூறினர்.
மேலும், நாட்டை “முற்றுகையிட்டிருப்பது” போன்ற கருத்துகளை பரப்புவதும், உயர் பதவி வகிப்பவர்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பதும் பொதுமக்களிடையே ஜனநாயக அமைப்புகளின் மீதான நம்பிக்கையை பாதிக்கலாம் என எச்சரித்தனர். பொது அமைதிக்காக சட்ட அமலாக்க அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகளை நியாயமாக ஆய்வு செய்ய வேண்டும்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் வகிக்கும் பதவிக்கு மரியாதையும் கண்ணியமும் வழங்கப்பட வேண்டும் என்றும் கடிதம் வலியுறுத்துகிறது.
கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ரஜத் சேத்தி, ஏ.கே. ராகவன், அபிக்யான் சத்யம், அபிஷேக் எம், ஆதித்ய சீனிவாசன், ஆதித்யா குல்ஸ்ரேஷ்டா, ஆகாஷ் சபர்வால், உதய பிர்ஜே ரகுநாத், பிரியம்பதா மிஸ்ரா, சுஜீத் குமார், ரிச்சா ஆர்யா, ரஷ்மினி கோபர்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.





