தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி, அந்த அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதி லட்சுமி நாராயணன், தமிழக அரசு தரப்பிடம் தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பினார். பாதுகாப்பு காரணங்கள் அடிக்கடி முன்வைக்கப்படும் ஜம்மு-காஷ்மீரிலேயே ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படுகிற நிலையில், தமிழகத்தில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒவ்வொரு முறையும் அனுமதி பெற நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஆர்எஸ்எஸ்க்கு ஏற்படுகிறது என்றும், இது ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி பிற கட்சிகள் அல்லது அமைப்புகளுக்கும் பொருந்தும் வகையில் அனுமதி மறுப்பு நடைபெறுகிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன், திருவிழா காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்காமல், ‘ஊர்வலம் நடத்துவது தேசவிரோத செயலா?’ என கேள்வி எழுப்பி, இத்தகைய மறுப்புகள் தேவையற்ற வழக்குகளுக்கும் காவல்துறைக்கு எதிர்மறை விளம்பரத்திற்கும் வழிவகுக்கும் எனக் கூறினார்.

இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் அரசு தரப்பினர் பேசி சுமூக தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.