கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட மார்க்கெட் பகுதியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான கடவுபாகம் யூத வழிபாட்டு தலத்தின் நுழைவாயில் அருகே நடந்த தீவைப்பு சம்பவம், பயங்கரவாத சதி கோணத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை தகவலின்படி, அக்டோபர் 12 அதிகாலை 2.30 மணியளவில் ‘மாருதி சுசூகி இக்னிஸ்’ காரில் வந்த ஒருவர் நுழைவாயில் அருகே தீ வைத்துள்ளார். அந்த நிகழ்வை மொபைல் போனில் பதிவு செய்து அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் சுற்றுவட்டார கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வாகன விவரங்களைத் தடம் பிடித்தனர்.

இதையடுத்து, எர்ணாகுளம் புத்தன்குருஸ் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த எபின் பால் என்பவரை சில மணி நேரங்களிலேயே போலீசார் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட அவரது மொபைல் போனில் தீவைப்பு காட்சி பதிவாக இருந்ததாகவும், அடையாளம் தெரியாத ஒருவரின் உத்தரவின் பேரில் அவர் செயல்பட்டிருக்கலாம் எனவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பிற யூத வழிபாட்டு தலங்கள் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததற்கான தடயங்களும் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத நபருடன் நடந்த தொடர்புகளுக்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் ஹெராயின், கெட்டாமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினர்.

முன்னதாக மூவாட்டுப்புழாவில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் நடந்த இதேபோன்ற தீவைப்பு சம்பவத்துக்கும் எபின் பாலுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில், தொடர்புடைய தகவல்கள் மத்திய புலனாய்வு முகமைகளுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. கைப்பற்றப்பட்ட சாதனங்களில் தடயவியல் ஆய்வு செய்து தகவல் தொடர்புகளின் மூலங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற குற்றங்களுடன் இணைப்பு உள்ளதா என்பதையும் கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.