டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி ‘கரப்பான் கட்சி’ சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தடையை மீறியதாகக் கூறி, அக்கட்சியின் நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் போராட்டம் என்ற போர்வையில் இந்த இயக்கம் செயல்படுகிறது என்றும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருகிறது என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான மேரி மில்பென், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உள்ள சில அமெரிக்க தொழிலதிபர்கள் ‘கரப்பான் கட்சி’க்கு நன்கொடை அளித்து போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும், குறிப்பிட்ட வெளிநாட்டு நன்கொடையாளர்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பாணியைப் பின்பற்றுவதாகவும், உறுதியான நிலைப்பாடு கொண்ட தலைவர்களை குறிவைப்பதே அந்தப் பாணி என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.

இந்திய மக்கள் அஞ்ச வேண்டாம் என்றும், 25 ஆண்டுகளாக அரசு தலைமைப் பொறுப்பில் திறம்பட பணியாற்றிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் சில தீயசக்திகளுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டார் என்றும் மேரி மில்பென் தெரிவித்ததாக செய்தி கூறுகிறது.