தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில், அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், விலை உயர்வு கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக ஏற்பட்டதாக தெரிவித்தார்.

உதாரணமாக, 2023-ல் கிலோ 52 ரூபாயாக இருந்த அரிசி 2024-ல் 60 ரூபாயாகவும், 2025-ல் 65 ரூபாயாகவும் உயர்ந்ததாக அவர் கூறினார். மேலும், 2022-ல் கிலோ 110 ரூபாயாக இருந்த துவரம் பருப்பு விலை 2024-ல் 171 ரூபாயாக உயர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து, எங்கு குறைபாடு அல்லது முறைகேடு உள்ளதென கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தேவையான உணவுப்பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், கர்நாடகா பொன்னி மற்றும் ஆந்திர பொன்னி அரிசி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்ததாகவும் அமைச்சர் விளக்கினார். 250 அமுதம் அங்காடிகள் மூலம் 25,000 மெட்ரிக் டன் ‘சன்ன’ ரக அரிசியை கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், துவரம் பருப்பு கிலோ 130 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சில குறிப்பிட்ட கட்சிகளுடன் தொடர்புடைய வியாபாரிகள் உணவுப்பொருட்களை பதுக்குவதால் விலைவாசி உயர்வதாக குற்றம்சாட்டிய அமைச்சர், பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.