வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில், அனிதா ஆனந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாக கூறினார். வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா–கனடா உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளின் மக்களுக்கும் உறுதியான பலன்களை வழங்கும் வகையில், தொலைநோக்குடைய உறவை கனடாவுடன் உருவாக்க இந்தியா உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.





