கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவிலும் இந்த பருவமழை தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு சீரான மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், குமரி கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேலும் மற்றொரு வளிமண்டல சுழற்சி காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலவரத்தை முன்னிட்டு கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். மழைக்காலத்தில் சென்னை மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.





