தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவிலும் மழை பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் துரை நிருபர்களிடம் பேசுகையில், கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்ததாகவும், சில இடங்களில் கனமழை பதிவானதாகவும் தெரிவித்தார். கரூர் தோகைமலையில் 11 செ.மீ., நாகை மற்றும் தர்மபுரியில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். இதேபோல் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 21% குறைவாக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “சூப்பர் எல்நினோ” காரணமாக பெருவெள்ளம் ஏற்படும் வாய்ப்பு தற்போது இல்லை என்றாலும், கடந்த ஆண்டைப் போல மேகவெடிப்பு போன்ற நிகழ்வுகளால் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.