பணி நியமனம், பணியிட மாறுதல் உள்ளிட்ட விஷயங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்; நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க 4,724 பேர் வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்பட்டு வருவதாக கூறினார். இந்த நியமனம் “ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல்” நடைபெறுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், தேர்வானவர்களின் விவரங்களை பார்த்துவிட்டு பணி வாங்கித் தருவதாக கூறி சிலர் பணம் பெறுவதாக தகவல்கள் வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். செவிலியர்கள் பணியிடங்கள் தொடர்பாக லஞ்சம் பெற முயன்றால் தன் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டெங்கு நிலவரம் குறித்து அவர் கூறுகையில், 2025ஆம் ஆண்டில் 25,585 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 23,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் நேற்று மட்டும் 118 பேருக்கு டெங்கு உறுதியானதாக கூறிய அவர், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.
மேலும், யார் எதற்காக லஞ்சம் கேட்டாலும் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும், புகார் அளிப்பவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.





