கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கா.அ. செங்கோட்டையன் பெற்ற வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்று பின்னர் அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் பிரபு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சஞ்சய் குமார் தார்மிக அடிப்படையில் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தன் முடிவை விளக்கும்போது, தமிழகம் தொடர்பான மற்றொரு வழக்கில் அரசு வழக்கறிஞர் தொடர்ந்து ஒத்திவைப்பு கேட்ட நிலையில் தாம் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அது தமிழக முதல்வரை தாம் பாராட்டியதாக பரவியதால், அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வழக்கை தாம் விசாரிப்பது சரியல்ல என கருதி விலக முடிவு செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு வேறு அமர்வில் பட்டியலிட பரிந்துரைக்கப்பட்டது.