புதுடில்லி: ஹிந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மதம் மாறும் நபர்கள், மதம் மாறுவதற்கு முன் இருந்த சமூகப் பின்தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டு பலன்களை கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
பிற மதங்களில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ என சாதிச் சான்றிதழ் வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரசு தரப்பில், மதம் மாறிய காரணத்தால் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு பலனை இழக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. ஆனால் நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை உறுதி செய்து, மதம் மாறியவர் ‘முஸ்லிம்’ என்ற அடையாளத்திலேயே கருதப்படுவார்; முன் அடையாளத்தை வைத்து ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்’ அந்தஸ்தை கோர முடியாது என்று தெரிவித்தது.
தீர்ப்பின் முக்கியக் குறிப்புகளில், அரசியலமைப்பின் 16(4) பிரிவின் கீழ் இடஒதுக்கீடு அல்லது சிறப்புச் சலுகைகளை, மதம் மாறுவதற்கு முன் இருந்த சமூகப் பின்தங்கிய நிலையை மட்டும் வைத்து கோர முடியாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும், அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணையின்படி ஹிந்து, சீக்கிய, பவுத்த மதங்களைத் தவிர பிற மதங்களைப் பின்பற்றுவோர் பட்டியல் சாதி அந்தஸ்தில் கருதப்பட மாட்டார்கள்; அதனால் அந்த அந்தஸ்தும் அதனுடன் தொடர்புடைய சலுகைகளும் இழக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.
மேலும், ஹிந்து அல்லாத சமூக அமைப்பிற்கு மாறுவது, புதிய சமூகத்தில் தானாகவே அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு அந்தஸ்தை வழங்காது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஒருவர் பின்னர் மீண்டும் ஹிந்து சமூக அமைப்பிற்கு திரும்பினால், இடஒதுக்கீட்டு தகுதியை முன் அந்தஸ்தை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது; பழைய சாதி/சமூக அடையாளம் உண்மையில் மீண்டும் நிலைபெற்றுள்ளதா உள்ளிட்ட உண்மைகள் மற்றும் சட்டத் தகுதிகள் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.





