புதுடில்லி: அக்டோபர் 12-ம் தேதி உச்சநீதிமன்றத்தை நோக்கி இண்டி கூட்டணி நடத்திய பேரணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த பேரணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், எஸ்ஐஆர் தொடர்பான பணிகளை ரத்து செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு எதிராக இண்டி கூட்டணி சார்பிலும், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, பேரணியாக உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததை தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையாக கண்டித்தார். நீதித்துறையை யாராலும் அச்சுறுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, ராகுல் காந்தி மற்றும் ஓவைசி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும், எதிர்க்கட்சிகளின் மனுக்களுக்கு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.