வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறியவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்புகளை பெரிதும் பாதிக்கக்கூடிய விதிமாற்றத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் சில பிரிவினருக்கு தற்காலிகமாக வேலை செய்ய “பணி அனுமதி சான்றிதழ்” (EAD) வழங்கப்படுகிறது. இதில் வெளிநாட்டு ஊழியர்கள், எச்1பி விசாவில் வருபவர்களின் கணவர்/மனைவி, அடைக்கலம் கோருபவர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.
முன்னதாக, புதுப்பிப்பு விண்ணப்பம் அளித்தவர்கள் அனுமதி வரும்வரை 540 நாட்கள் வரை வேலை தொடரும் வகையில் நடைமுறை இருந்தது. அந்த காலத்திற்குள் அனுமதி வராவிட்டால், நீட்டிப்பு தானாக வழங்கப்பட்டதாகக் கருதும் ஏற்பாடு, முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் வேலை இழப்பைத் தவிர்க்க கொண்டு வரப்பட்டது.
புதிய விதியின்படி, பணி அனுமதி ஆவணம் அதிகாரப்பூர்வமாக கையில் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்டவர்கள் வேலை தொடர முடியாது. கடந்த ஆண்டு தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாற்றம், பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 30க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட புதுப்பிப்பு விண்ணப்பங்களுக்கு இந்த விதி பொருந்தும் என செய்தி கூறுகிறது.





