கோவையைச் சேர்ந்த கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம், கோவையின் முக்கிய வளர்ச்சி தேவைகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல் மற்றும் ரிங் ரோடு கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் முன்வைத்துள்ளார்.

கோவை தொழிலாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளி, மருத்துவத் துறை போன்றவற்றின் ஆதரவுடன் தானாக வளர்ந்த நகரம் என்றாலும், அதற்கேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் கிடைக்கவில்லை என அவர் கூறினார். வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாகவும், தேவையான சாலைகள் மற்றும் பார்க்கிங் வசதிகள் குறைவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கோவையின் மக்கள் தொகை தற்போது சுமார் 20 லட்சம்; அடுத்த சில ஆண்டுகளில் 40 லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பதால், மதுரையைப் போல கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்; அதனால் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் வரவும், மேம்பட்ட சிகிச்சை கிடைக்கவும் வாய்ப்பு உருவாகும் என வலியுறுத்தினார்.

மேலும், சமீபத்தில் கட்டப்பட்ட ஜி.டி. மேம்பாலம் மட்டுமே போதாது; கூடுதல் மேம்பாலங்கள் தேவை என்றும் கூறினார். மருத்துவச் சுற்றுலா வளர்ச்சியால் வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வருவதைக் கருத்தில் கொண்டு விமான நிலைய விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியை முன்னிட்டு கோவைக்கு அருகில் துணை நகரம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். மத்திய அரசிடம் கோவையின் தேவைகளைப் பெற்றுத் தர முதல்வர் முயற்சி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.