சண்டிகர்: சத்தீஸ்கர் மறுவாழ்வு முயற்சிகள் குறித்து அமித்ஷா
நாட்டில் நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வருகிற நிலையில் இருந்தாலும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக மக்கள் அனுபவித்த துயரங்களை ஒரேடியாக அழித்துவிட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
சத்தீஸ்கரை குறிப்பிட்டு, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஏழை பழங்குடியின மக்களுக்கு தீர்வு வழங்குவது மாநில அரசின் கடமை என்றும், அதற்கு மத்திய அரசின் முழு ஆதரவும் இருக்கும் என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பாஜ அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சத்தீஸ்கரில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள்கூட வழங்கத் தவறியதாக அவர் விமர்சித்தார். தற்போது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழங்குடியினர் கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும், நக்சலிசத்தின் எஞ்சிய தடயங்களை ஒழித்து பஸ்தரை அமைதியான, செழிப்பான பகுதியாக மீட்டெடுக்க அரசு உறுதியாக இருப்பதாகவும் அமித்ஷா கூறினார்.





