தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் ‘வீ த லீடர்ஸ்’ போட்டியிடும்; யாருடனும் கூட்டணி இல்லை என்று அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. ஐடெக் அரங்கில் நடைபெற்ற “ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறம், அரசியல், மையம்” தொடக்க விழாவில் அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பிரபாகரன், ரூட்ஸ் நிறுவனத் தலைவர் ராமசாமி, அப்துல் கலாம் குடும்ப உறுப்பினர் ஷேக் சலீம், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாலதி, நேதாஜி படையில் இருந்த 108 வயதான லெப்டினன்ட் மாதவன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
மேடையில், அப்துல் கலாம் பங்கேற்ற நிகழ்வுகளை விளக்கும் வகையில் 100 கிலோ எடையுள்ள துணியால் நெய்யப்பட்ட புத்தகம் வெளியிடப்பட்டது. கலாமின் கனவை நிறைவேற்றும் நோக்கில் குடும்பத்தினர் அனுமதியுடன் இந்த மையம் தொடங்கப்பட்டதாக அண்ணாமலை கூறினார். மரக்கன்று நடுதல், தூய்மை பணிகள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 14 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைப்பில் 21 லட்சம் பேர் இணைந்துள்ளதாக கூறிய அவர், 2027 அக்டோபருக்குள் தரமிக்க ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிப்போம் என்ற இலக்கை முன்வைத்தார். வைகை, பழனி சண்முக நதி, தாமிரபரணி ஆகிய நதிகளில் ஏழு வாரமாக தொடர்ந்து தூய்மை பணிகள் நடப்பதாகவும், ஓராண்டுக்குள் 175 கி.மீ. நதிப் பகுதிகளை தூய்மைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது தொடங்கிய மையத்தில் முதல்கட்டமாக 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை, அரசியல் கட்சியாக இல்லாவிட்டாலும் அமைப்பாகவே தேர்தலில் போட்டியிடுவோம் என்றும், அடிப்படை மாற்றம் உள்ளாட்சியிலிருந்து சட்டசபை தேர்தல் வரை வர வேண்டும் என்றும் கூறினார். வயது வித்தியாசமின்றி, அரசியல் அனுபவமில்லாதவர்களுக்கும் தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் காற்றாலை, சூரிய மின்சாரத்தை சேமித்து பயன்படுத்த மின்வாரியம் பேட்டரி கட்டமைப்பை உருவாக்கவில்லை என விமர்சித்தார்; ஓராண்டுக்கு பின் ஆட்சியை பற்றி பேசுவேன் என்றார். நடிகர் விஜய் வருகையால் போக்குவரத்து சிரமம் ஏற்படுவதாகவும், பாதுகாப்பை எளிமைப்படுத்த முதல்வர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். தாராபுரம், மதுராந்தகத்தில் பணம் இல்லாத இடைத்தேர்தலை முதல் முறையாக பார்க்க முடிந்ததாகவும், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.





