புதுடில்லி: மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளில் அழைப்பவரின் பெயரும் திரையில் தோன்றும் வசதியை நவம்பர் 1 முதல் கட்டாயமாக அமல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.

மோசடி அழைப்புகளால் மக்கள் ஏமாறாமல் இருக்க, அழைப்பவர் பெயரை காட்டும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) 2024 பிப்ரவரியில் பரிந்துரைத்தது. இதையடுத்து சில நிறுவனங்கள், எண்ணை போனில் சேமிக்காதிருந்தாலும் அழைப்பவர் பெயர் திரையில் தோன்றும் முறையை செயல்படுத்தின.

டிராய் ஒப்புதலுடன், இந்த வசதியை அனைத்து நிறுவனங்களும் கட்டாயமாக வழங்க வேண்டும் என DoT தற்போது அறிவுறுத்தியுள்ளது. இது 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளை பயன்படுத்தும் மொபைல்களுக்கு பொருந்தும்.

இந்த முறையில், சேமிக்கப்படாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட பெயர் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தரவுத்தளத்தில் இருந்து எடுத்து எண்ணுடன் சேர்த்து காட்டப்படும். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளுக்கு திரையில் “சர்வதேச அழைப்பு” என தெரிவிக்கப்படும்.

மேலும், வணிக நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான பெயரை காட்ட கோரலாம்; ஆனால் அது ஜி.எஸ்.டி. பதிவில் உள்ள பெயருடன் பொருந்த வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்த பிறகே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனுமதி வழங்கும் என DoT தெரிவித்துள்ளது.