சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இயங்கி வரும் உடற்கல்வியியல் கல்லூரியில், போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை மீண்டும் முதல்வராக நியமித்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கு விவரங்களின்படி, 2022-ல் அந்தக் கல்லூரி முதல்வராக இருந்த ஜார்ஜ் ஆப்ரகாம் மீது, 23 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. மாணவியின் புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தது; பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், அவரை மீண்டும் அதே கல்லூரியின் முதல்வராக நியமித்ததை எதிர்த்து, அவரது ஜாமினை ரத்து செய்யக் கோரி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஜார்ஜ் ஆப்ரகாம் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கும் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியிலேயே அவர் மீண்டும் முதல்வராக நியமிக்கப்பட்டதால் மாணவியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மூன்று ஆண்டுகள் கடந்தும் விசாரணை தொடங்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி என். ரமேஷ், பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் குற்றம்சாட்டப்பட்டவரை மீண்டும் நியமித்தது எப்படி என கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார். தேவையெனில் அவரை பணியிட மாற்றம் செய்ய நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.





