தலைமை தேர்தல் கமிஷனருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கும் எதிராக டெல்லியில் நடந்துவரும் ‘இண்டி’ கூட்டணியின் தொடர் போராட்டங்களை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே காங்கிரஸ் தலைமையின்மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிக்கையின்படி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீட்டில் நடைபெற்ற தேநீர் சந்திப்பில் பங்கேற்ற வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், “தினமும் ஒரு கட்சி” என்ற அடிப்படையில் கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என கருத்து தெரிவித்தார். இதை இடதுசாரி கட்சித் தலைவர்களும் ஆதரித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ‘இண்டி’ கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கலாம் என கூறப்பட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாக வெளியான தகவலில், டெல்லியில் 6, 7 தேதிகளில் ஆகாஷ்வாணி பவன் அருகே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் அவர்களையே மையப்படுத்தி நடந்ததாக கூட்டணி தலைவர்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத் திட்டம் குறித்து முன்கூட்டியே கூட்டணிக் கட்சிகளிடம் தெரிவிக்க வேண்டியிருந்ததாகவும் அவர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரி கட்சிகள், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குழப்பம் மற்றும் அடுத்தடுத்து வரும் பண்டிகைகள் காரணமாகவும் போராட்டத்தை காங்கிரஸ் தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக அந்த தகவல் கூறுகிறது.