அமெரிக்காவின் ஒரேகான் மாநிலம் பெண்ட் நகரில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், மூன்று சிறுவர் குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘சில்வர் ரெயில்’ துவக்கப்பள்ளியில் மதியம் சுமார் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பள்ளி வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை நோக்கி மர்ம நபர் முதலில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பள்ளியை சுற்றிவளைத்தனர்.
அதற்குள் அந்த நபர் பள்ளியை நோக்கி தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் தாக்குதலாளரை போலீசார் சுட்டுக் கொன்றனர். சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பள்ளிக்குச் சென்ற பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்த இந்த தாக்குதல், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடரும் சூழலில், அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





