லண்டன்: பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்லும் ‘தி மால்’ சாலையில் இளவரசர் வில்லியம், பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து நட்புறவு முறையில் கிரிக்கெட் விளையாடினார்.
மும்பையில் வரும் நவம்பரில் நடைபெற உள்ள ‘எர்த்ஷாட்’ பரிசு வழங்கும் விழாவில் வில்லியம் பங்கேற்க உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
இந்த ஜாலி போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, அஜிங்க்ய ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா, இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தற்போதைய கேப்டன் ஹாரி புரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரு கட்டத்தில் கங்குலி பந்துவீச, வில்லியம் பேட்டிங் செய்தார். பின்னர் வில்லியம் பவுலிங் செய்ய, லாரா பேட்டிங் செய்தார். இதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ‘கொல்கட்டா இளவரசர்’ என அழைக்கப்படும் கங்குலியை சந்தித்து அவருடன் விளையாடியதில் வில்லியம் அதிர்ஷ்டசாலி என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.





