குஜராத் மாநிலம் ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரீமா நானாவதிக்கு, அமைதி மற்றும் பாதுகாப்புக்காகப் பாடுபடும் தலைவர்களை கவுரவிக்கும் ‘ஹிலாரி ரோதம் கிளிண்டன் விருது’ அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளது.

ரீமா நானாவதி, இந்திய சுயதொழில் செய்யும் பெண்களின் சங்கமான ‘சேவா’ (SEWA) அமைப்பின் இயக்குநராக உள்ளார். இந்த அமைப்பின் மூலம் பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டவும், டெக்ஸ்டைல்ஸ், உணவு தயாரிப்பு, விவசாயம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் திறன் வளர்த்துக்கொள்ளவும் அவர் ஆதரவு அளித்து வருகிறார்.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புறப் பெண்களின் மறுவாழ்வு பணிகளுக்கும், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நடைபெற்ற மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கும் அவர் தலைமையேற்றுள்ளார்.

அவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு 2013ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.

இந்த விருதை அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ஜார்ஜ்டவுன் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தில் வழங்கினார்.