புதுடில்லி: இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்த எலான் மஸ்க் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், அம்பானியின் ரிலையன்ஸ் ஆதிக்கம் காரணமாக தாமதம் ஏற்படுகிறது என அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இந்தியர்களின் தரவு பாதுகாப்பு முக்கியம் என்றும், இந்திய சட்டங்களுக்கு உட்பட்டால்தான் இந்தியாவில் தொழில் தொடங்கவும் சேவை வழங்கவும் முடியும் என்றும் திட்டவட்டமாக கூறியது.
இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்திருந்த ரிலையன்ஸ், தற்போது மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் முதலீடுகளையும் புதுமைகளையும் வரவேற்கிறோம்; உள்ளூர் நிறுவனமோ வெளிநாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமம் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2016-ல் வாடிக்கையாளர்கள் இல்லாமல் சந்தையில் நுழைந்த ஜியோ, 10 ஆண்டுகளுக்குள் 53 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றதாகவும், உலகிலேயே குறைந்த விலையில் தரமான தரவு சேவையை வழங்கி வருவதாகவும் ரிலையன்ஸ் குறிப்பிட்டது.
ஜியோவின் சொந்த செயற்கைக்கோள் சேவைகளுக்கான அனுமதிகளும் இன்னும் காத்திருப்பில் உள்ளன என்றும், இந்தத் துறை எந்த ஒருவருக்கும் சொந்தமானது அல்ல என்றும் தெரிவித்தது. போட்டியை வரவேற்கிறோம்; ஆனால் ஸ்டார்லிங்க் உட்பட அனைத்து ஆபரேட்டர்களும் வணிக ரீதியான செயல்பாடுகளை தொடங்குவதற்கு முன் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியது.





