ஒவ்வொரு குடிமகனும் தன்னைப் பத்திரிகையாளர் எனக் கூறத் தொடங்கினால், அது அனைவருக்கும் சிக்கல்களை உருவாக்கும் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. டில்லியில் அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் நடந்த போராட்டங்களின்போது செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கும் போது இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. போராட்டங்களைச் செய்தி சேகரித்த சுயாதீன பத்திரிகையாளர்களை டில்லி போலீசார் அங்கீகரிக்கவில்லை என்றும், ஐடி கார்டு வைத்திருக்கும் எந்த பத்திரிகையாளரின் பணிக்கும் இடையூறு செய்யக் கூடாது என்றும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிட்டார். மேலும், தேசிய அளவில் ஒரு நெறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், கருத்துச் சுதந்திர உரிமையின் பெயரில் யாரும் தங்களைப் பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொள்ளும் போது தான் சிக்கல் உருவாகிறது என்று குறிப்பிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த உண்மையான செய்தியாளர்களை அடையாளம் கண்டு பாதுகாப்பு வழங்குவது அரசுக்கு கடினமாகிவிடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களையும் டிஜிட்டல் தளங்களில் பணிபுரிபவர்களையும் வேறுபடுத்துவதில் சவால்கள் இருப்பதாக அமர்வு கூறியது. சில போலீஸ் அதிகாரிகள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், இதை சுயாதீன விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தது.

இதற்கிடையில், வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக நான்கு மனுக்கள் உள்ளதாகவும், அவற்றில் பதிலளிக்குமாறு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.