புதுடில்லி: பேரணி நடத்தி நீதித் துறையை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. நீதிமன்றத்திற்குள் தலைவர்கள் என்ன பேசுகிறார்கள், வெளியே எப்படி பேசுகிறார்கள் என்பதையும் நீதிபதிகள் கவனித்து வருவதாகவும், வெளி உலகில் நடப்பதை அறியாத அளவுக்கு நீதிமன்றம் தனிமையில் இல்லை என்றும் அமர்வு குறிப்பிட்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வில், எஸ்.ஐ.ஆர். தொடர்பான எதிர்ப்புகள், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரிய கோரிக்கைகள், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார்கள், மேலும் நீதிமன்ற வளாகம் அருகே அரசியல் போராட்டங்களுக்கு வழிகாட்டுதல்கள் உருவாக்கக் கோரும் மனுக்கள் ஆகியவை ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
விசாரணையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் ‘இண்டி’ கூட்டணி தலைவர்கள் கடந்த அக். 12 அன்று டில்லியில் நடத்திய பேரணி, உச்ச நீதிமன்றத்தை அழுத்தம் கொடுப்பது போல இருந்ததாக சில வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மூத்த வழக்கறிஞரும் பா.ஜ. பிரமுகருமான கவுரவ் பாட்டியா, ராகுல் உள்ளிட்டோரின் கருத்துகள் மற்றும் நடத்தைகள் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, நீதித் துறையை யாரும் மிரட்டவோ அடிபணிய வைக்கவோ முடியாது என்று கூறினார். மேலும், உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை கோரிய மனுவில் பதில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக ராகுல் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 9 தலைவர்கள் தாக்கல் செய்த மனுவில் பதிலளிக்க தேர்தல் கமிஷன் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.





