திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள சாரா தக்கர் மகளிர் கல்லூரியில், பி.எச்.டி. ஆய்வுப் பணிக்கு ஒப்புதல் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, ஒரு பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவி, அந்தக் கல்லூரியின் வணிகவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தனது ஆய்வு வழிகாட்டியான பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாய், ஆய்வுக்கு ஒப்புதல் வழங்க பணம் கேட்டதாக அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அலைபேசி உரையாடல் ஒலிப்பதிவையும் மாணவி வெளியிட்டுள்ளார். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் குழு அமைத்து விசாரணை நடத்தியது.

விசாரணையில் பணம் கேட்டது உண்மை என தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர் பெலிசியா கிளாடிஸ் உத்தரவிட்டு பேராசிரியையை சஸ்பெண்ட் செய்தார்.

மேலும், அவர் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக செயல்படவும் தடை விதிக்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.