சென்னை: அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ள சூழலில், தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் இரண்டு மாதங்களுக்கான பொருட்களை முன்கூட்டியே வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயில் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. தென் மேற்கு பருவமழை குறைந்ததால் பல மாநிலங்களில் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

உணவு தானிய உற்பத்தி குறைந்ததன் பின்னணியில், அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.20-க்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதாக குறிப்பிட்டார். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத ரேஷன் பொருட்களை இம்மாத இறுதியில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சந்தை விலை உயர்ந்ததால் முன்பு ரேஷன் அரிசி வாங்காத சிலரும் தற்போது வாங்கத் தொடங்கியதால், ரேஷன் அரிசிக்கு தேவை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.