சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் குறித்து நிதித் துறையிடம் சில விவரங்களை முதல்வர் விஜய் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், தீபாவளி காலத்தில் ரேஷன் கடைகள் வழியாக இலவச மளிகை தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை கணக்கிட நிதித் துறையிடம் முதல்வர் விவரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மளிகை தொகுப்பு வழங்கினால் மக்கள் ஆறுதல் அடைவார்கள் என சில அமைச்சர்கள் முதல்வருக்கு ஆலோசனை கூறியதாகவும், இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட வாய்ப்புள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.





