திருச்சி திருவானைக்காவலில் ரூ.5 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் 15,000 சதுரஅடி நிலத்தை, திமுக வட்டச்செயலர் ஆக்கிரமித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில், திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
‘அகிலா கார்டன்’ வீட்டுமனைப் பிரிவில் பூங்கா, பொதுப்பாதை மற்றும் திட்டசாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இந்த இடம், பொதுப் பயன்பாட்டுக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த இடத்தில், திருவானைக்காவல் 6வது வார்டு திமுக வட்டச்செயலர் ஜனார்த்தனன் (35) மற்றும் திமுக முன்னாள் கோட்டத்தலைவர் ராஜசேகரன் மகன் சரவணன் ஆகியோர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் எழுப்பி மாட்டுக்கொட்டகை, கார் ஷெட் போன்ற அமைப்புகளை அமைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் பொன்மணி உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் முத்து முருகேச பாண்டியன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் இணைந்து இடத்தை மீட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
மேலும், ஜனார்த்தனனின் தாய் கலைமணி 6வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.





