இந்திய கடற்படை தொடர்பான ரகசிய தகவல்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு சென்றதாக கூறப்படும் வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாகப்பட்டினத்தில் ஆந்திர போலீசின் கவுண்டர் இன்டலிஜென்ஸ் பிரிவு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது.

கைது செய்யப்பட்டவர்கள் பொங்கு ரவி மற்றும் கடாரி ஸ்ரீனிவாஸ் என போலீஸ் தெரிவித்துள்ளது. இருவரும் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் பணியாற்றி வந்ததாகவும், உளவு வேலை செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

விசாரணையில், 2023-ஆம் ஆண்டு ‘ஏஞ்சல் பயல்’ என்ற பெயரில் இயங்கிய போலி சமூக வலைதள கணக்கைப் பயன்படுத்திய பெண்ணுடன் பேஸ்புக் மூலம் இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பணத்திற்காக நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தொடர்பான ரகசிய தகவல்களை பகிர்ந்ததாக போலீஸ் சந்தேகிக்கிறது.

இதே வழக்கில் அண்மையில் கடற்படை அதிகாரி பிரதீப் முகர்ஜி கோவையில் வைத்து ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டிருந்தார். புதிய கைது நடவடிக்கையுடன் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மொத்தம் 18 சந்தேக நபர்கள் உள்ளதாகவும், அவர்களில் 13 பேர் கடற்படை பணியாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது; இது வழக்கின் தீவிரத்தைக் காட்டுகிறது.