வாட்ஸாப் மூலம் வரும் போலி தகவல்களை பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கும் புதிய இணைய மோசடி குறித்து ஹைதராபாத் போலீசார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் கூறியதாவது: அறிமுகமில்லாத எண்ணிலிருந்து முதலில், உங்கள் வங்கி கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் வரும். அதனைத் தொடர்ந்து, அந்த பரிவர்த்தனையை நீங்கள் செய்யவில்லை என்றால் உடனே ‘நோ’ என்று பதிலளிக்குமாறு மற்றொரு செய்தி அனுப்பப்படும்.

பதற்றத்தில் சரிபார்க்காமல் ‘நோ’ என்று பதிலளித்தால், அந்தச் செய்தியில் மறைந்திருக்கும் மென்பொருள் செயல்படத் தொடங்கலாம். இதன் மூலம் மோசடி நபர்கள் உங்கள் மொபைலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வங்கி கணக்கிலுள்ள பணத்தை முழுமையாக திருடக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் ஓ.டி.பி. (ஒருமுறை கடவுச்சொல்) தெரிவிக்கவும், சந்தேகத்துக்குரிய லிங்கை அழுத்தவும் தேவையில்லை என்பதால் கூடுதல் கவனம் தேவை என போலீசார் தெரிவித்தனர். வங்கி பரிவர்த்தனை தொடர்பாக அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் வாட்ஸாப் செய்திகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என எந்த பதிலும் அனுப்பாமல், அந்த எண்ணை பிளாக் செய்து உரையாடலை நீக்கி, பரிவர்த்தனை நடந்ததா என்பதை வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியில் நேரடியாக சரிபார்க்க வேண்டும்; வங்கிகள் வாட்ஸாப் மூலம் இவ்வாறு உறுதிப்படுத்தல் கேட்பதில்லை என்றும் அவர்கள் கூறினர்.