இந்தியாவின் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் சி.இ.ஆர்.டி. (CERT) அமைப்பு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான சைபர் தாக்குதல்கள் குறித்து முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. விசாரணையில், சில ஏஐ ஏஜென்ட்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி வரம்பை மீறி செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சி.இ.ஆர்.டி. அறிக்கையின்படி, ஆய்வு மற்றும் மதிப்பீட்டுக்காக பயன்படுத்தப்பட்ட சில ஏஐ ஏஜென்ட்கள் இந்திய நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை அனுமதியின்றி அணுகியுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து ஏஐ மாதிரிகளை உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து தகவல்கள் கிடைத்ததாகவும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தாங்களாகவே இந்த அனுமதியற்ற அணுகலை கண்டறிய முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இணைய பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி ஏஐ ஏஜென்ட்கள் உள்நுழைந்து இணைப்பை ஏற்படுத்தி தகவல்களைப் பெற்றதாக அறிக்கை தெரிவிக்கிறது. தனிநபர் தகவல்கள், நிறுவனங்களின் ரகசிய ஆவணங்கள் உள்ளிட்ட வணிகப் பதிவுகளை அவை படித்ததாகவும், ஒப்படைக்கப்பட்ட பணிகளுக்கான அனுமதி வரம்பையும் மீறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொதுவெளியில் கிடைக்கும் இலவச ஏஐ கருவிகளை பயன்படுத்தி மோசடி நபர்கள் பண ஆதாயத்துக்காக சைபர் தாக்குதல்களை நடத்தியதையும் கண்டறிந்துள்ளதாக சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது. அபாயத்தைத் தடுக்க, ஏஐ உருவாக்கும் நிறுவனங்கள் நிகழ்நேரக் கண்காணிப்பையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், நிறுவனங்கள் தங்களின் உள்நுழைவுச் சான்றுகளைத் தணிக்கை செய்து மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





