சென்னையில் 1,000 ஏசி மின்சார பேருந்துகளை கொண்டு வருவதற்கான டெண்டரை ரத்து செய்ததாக வெளியான அறிவிப்பை, அடுத்த நாளே தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.) தேசிய தகவல் மையத்துக்கு (என்.ஐ.சி.) எழுதிய கடிதத்தில், டெண்டர் “தவறுதலாக” ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்து, அதை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுள்ளது.

அதே கடிதத்தில், டெண்டர் சமர்ப்பிக்கும் கடைசி நாளை நவம்பர் 4 வரை நீட்டிக்கவும் கோரப்பட்டுள்ளது. ரத்து நடவடிக்கையை திரும்பப் பெறுவதால் ஏற்படும் சட்டப்பூர்வ விளைவுகளுக்கு எம்.டி.சி. முழுப் பொறுப்பு ஏற்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரில் அதிகரிக்கும் பயணிகள் தேவையை சமாளிக்க பேருந்து சேவையை விரிவுபடுத்த எம்.டி.சி. திட்டமிட்டிருந்தது. தனியார் பங்களிப்புடன் மொத்த செலவு ஒப்பந்த (Gross Cost Contract) அடிப்படையில் 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகளை இயக்க டெண்டர் வெளியிடப்பட்டிருந்தாலும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு டெண்டர் திறக்கும் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன், நிர்வாக காரணங்களை முன்வைத்து டெண்டர் ரத்து செய்யப்படுவதாக எம்.டி.சி. அறிவித்திருந்தது. கடந்த ஆட்சியில் நிர்வாக ஒப்புதல் இல்லாமல் டெண்டர் விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜெர்மனியின் வளர்ச்சி வங்கியான கே.எப்.டபிள்யூ. நிதியுதவியுடன் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான முந்தைய டெண்டரும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, சென்னை மெட்ரோ நிலையங்களுக்கு இணைப்பு போக்குவரத்து வசதி வழங்க 220 ஏசி சிறிய வகை தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க புதிய டெண்டர் கோர எம்.டி.சி. தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.