தமிழ் திரையிசை உலகில் “தேனிசைத் தென்றல்” என அன்புடன் அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவா இன்று சென்னையில் காலமானார். வயோதிகம் காரணமான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்கவில்லை.

1989-ஆம் ஆண்டு மனசுக்கேத்த மகராசா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட சுமார் 450 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கான பல வெற்றிப் பாடல்களை வழங்கியதுடன், தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவராகவும் குறிப்பிடப்படுகிறார்.

தேவாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், கவர்னர் அர்லேக்கர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா, தந்தைக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டதாகவும், சிகிச்சையளித்தும் காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தார். தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும், அக்டோபர் 18 அன்று மதியம் 1 மணிக்கு தி.நகர் வீட்டிலிருந்து உடல் புறப்படும் என்றும் கூறினார்.

இதனிடையே, முதல்வர் விஜய் தி.நகர் பத்மநாபன் தெருவில் உள்ள தேவாவின் இல்லத்திற்கு நேரில் சென்று மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்ரீகாந்த் தேவாவை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்.