வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் இது “ஓட்டு திருட்டு” எனவும் எதிர்க்கட்சிகள் கூறிவருவதற்கு தேர்தல் கமிஷன் மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் நோக்கம் தகுதியுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதும், பட்டியலில் உள்ள பிழைகள் மற்றும் தகுதி இல்லாத பதிவுகளை நீக்குவதும்தான் என கமிஷன் விளக்கமளித்துள்ளது.

பா.ஜ. வெளியிட்ட கேள்வி–பதில் குறிப்பில் இடம்பெற்ற தகவலின்படி, எஸ்.ஐ.ஆர். செயல்முறையில் முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதில் விண்ணப்பிக்காதவர்கள் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்கள் (3 கோடி), இறந்தவர்கள் (2.80 கோடி), ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள் (1 கோடி), நிரந்தரமாக இடம் மாறியவர்கள் (6.30 கோடி) உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் பெயர்கள் வரைவு நிலையில் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு பட்டியல் அரசியல் கட்சிகள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கப்பட்டு, வாக்காளர்கள் ஆட்சேபனை தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டதாக கமிஷன் கூறியுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் தரவுத்தளம் மையப்படுத்தப்படவில்லை; மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் தேர்தல் பதிவு அதிகாரிகள் (இ.ஆர்.ஓ.) பட்டியலை தயாரித்து பராமரிக்கும் பரவலாக்கப்பட்ட அமைப்பே தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

படிவம் 6 தொடர்பாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், வாக்காளர்களின் வசதிக்காக படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவம் ஒன்றாக இணைக்கப்பட்டதாகவும், இதை மே 27 அன்று உச்ச நீதிமன்றம் அங்கீகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. முதல்முறை வாக்காளர்களுக்கு சிக்கல் இல்லை எனவும், 2025 ஜூன் 24 முதல் ‘ஜென் சி’ தலைமுறையைச் சேர்ந்த 2.37 கோடி பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தினமும் சுமார் 50 ஆயிரம் பேர் சேர்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தலைமை தேர்தல் கமிஷனர் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்தார் என்ற குற்றச்சாட்டையும் கமிஷன் நிராகரித்து, அனைத்து முடிவுகளும் மூன்று கமிஷனர்களின் ஒப்புதலுடன் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.