தமிழ்நாட்டில் அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அறநிலையத்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு பரப்பளவில் உள்ளன, அவை கோவில் நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலா, குத்தகைதாரர்களின் அனுபவத்திலா, அல்லது ஆக்கிரமிப்பிலா உள்ளன என்பதுடன், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கோவில் சொத்துகள் தொடர்பான நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றையும் மாவட்ட வாரியாக தெரிவிக்க நீதிமன்றம் கேட்டுள்ளது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்கும் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் “கட்டளை” நிலத்தில், சட்டவிரோதமாக தனிநபர் பெயர்களில் பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, இத்தகைய சொத்துகளை மீட்டு பாதுகாக்க நடவடிக்கை கோரப்பட்டது.
நீதிபதிகள் பி.வேல்முருகன், ஆர்.பூர்ணிமா அமர்வு முன் வழக்கு மீண்டும் வந்தபோது, அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அறிக்கையின் அடிப்படையில் குழு அமைத்து ஆய்வு செய்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்து, வழக்கை நவம்பர் 27க்கு ஒத்திவைத்தனர்.





