இரவுநேரத்திலும் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சூரிய ஒளியை திருப்பி விடும் வகையில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக, அமெரிக்காவின் ரிப்ளெக்ட் ஆர்பிட்டல் நிறுவனம் ஹைதராபாதைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட ரிப்ளெக்ட் ஆர்பிட்டல், விண்வெளியில் பெரிய பிரதிபலிப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, அவற்றின் மூலம் சூரிய ஒளியை பூமியின் தேவையான இடங்களுக்கு பிரதிபலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பேரிடர் கால மீட்புப் பணிகளுக்கு இரவில் வெளிச்சம் வழங்கவும், சூரிய மின் நிலையங்கள் கூடுதல் நேரம் மின்சாரம் உற்பத்தி செய்யவும் உதவும் என கூறப்பட்டுள்ளது.

நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, தேவையான இடங்களில் சுமார் 5 சதுர கி.மீ. பரப்பளவுக்கு சூரிய ஒளியை செயற்கைக்கோள் மூலம் செலுத்த முடியும். பிரகாசத்தை கட்டுப்படுத்தவும், தேவையான நேரத்தில் நிறுத்தவும் இயலும். தொலைதூர தொழில் பகுதிகளில் பணிநேரத்தை நீட்டித்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது நிகழ்ச்சிகளுக்கான வெளிச்சம் போன்ற பயன்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த ஏவுதல்களுக்கு ஸ்கைரூட்டின் ‘விக்ரம்’ ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல் செயற்கைக்கோள் ‘விக்ரம்-1’ மூலம், இரண்டாவது செயற்கைக்கோள் தற்போது உருவாக்கத்தில் உள்ள ‘விக்ரம்-1U’ மூலம் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 1993-ல் ரஷ்ய விஞ்ஞானிகள் ‘ஸ்னாம்யா’ திட்டத்தின் கீழ் 65 அடி நீள பிரதிபலிப்பு கண்ணாடியை விண்வெளியில் நிலைநிறுத்தி, பூமியில் சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்தனர். சோதனை வெற்றிகரமாக நடந்தாலும், நிதிப் பற்றாக்குறையால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.