டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான இந்திரா பவனில், இளைஞர் பிரிவைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேநீர் விருந்து அளித்தார். இதில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இளம் நிர்வாகிகளிடம் பேசிய ராகுல், காங்கிரஸ் தொண்டர்கள் “சிங்கங்களைப் போன்றவர்கள்” என்றும், அரசியல் அழுத்தங்களுக்கும் “பொய் வழக்குகளுக்கும்” அஞ்சமாட்டார்கள் என்றும் கூறினார். பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து போராடுபவர்களே உண்மையான காங்கிரஸ் வீரர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, அரசியல் அழுத்தங்களுக்கு பயந்தோ அல்லது சுயநலத்தால் கட்சியை விட்டு சென்றவர்களை “கோழைகள், துரோகிகள்” என ராகுல் விமர்சித்தார். இதன் மூலம் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்.பி.என். சிங், ஜிதின் பிரசாதா ஆகியோரை அவர் மறைமுகமாக சாடியதாக கூறப்படுகிறது.

ராகுல் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, கார்கே சிரித்தபடி இடைமறித்து, “கட்சியை விட்டு விலகியவர்கள் எல்லாரும் உங்கள் நண்பர்கள்தானே?” எனக் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ராகுல், அவர்களை நண்பர்களாக அடையாளம் காண்பதில் தவறு செய்துவிட்டதாக பதிலளித்தார்.

இந்த உரையாடலில் கார்கே திடீரென குத்திக்காட்டிய விதம் தற்போது காங்கிரஸ் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.