கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நீதிமன்றத் தடையாணை காரணமாக செவிலியர் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சட்டரீதியாக அந்த சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தினார். மேலும், குமரி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படாமல் வளாகத்திற்குள்ளே குழி தோண்டி புதைக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொளத்தூர் தவெக எம்எல்ஏ பாபு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் கூறிய அமைச்சர், அவர் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.

மேலும், தற்காலிகச் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யும் கோரிக்கையை தொடர்ந்து, முதற்கட்டமாக 2,500 செவிலியர்களை நிரந்தரம் செய்வதற்கான அரசாணை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.