சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவித்து, மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அறிக்கையில், தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், தெற்கு கடலோர ஆந்திரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் இன்னொரு வளிமண்டல சுழற்சி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலின் வடமேற்குப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பாதை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானிலை அமைப்புகளின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதாகவும், இன்று முதல் அக்.20 வரை பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
அக்.18 (ஞாயிறு) அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அக்.19 அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.20 அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





