இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 2.45 நிமிடங்கள் கொண்ட வீடியோவில், இந்த செய்தி தன்னை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியதாக அவர் கூறினார்.
தேவா தன்னுக்காக அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய மூன்று படங்களுக்கு இசையமைத்ததாகவும், அவை அனைத்தும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்ததாகவும் ரஜினிகாந்த் நினைவுகூரினார். படையப்பா படத்தின் போது பலர் ஏ.ஆர். ரஹ்மானை இசையமைப்பாளராக பரிந்துரைத்த சூழலையும் அவர் பகிர்ந்தார்.
அந்தப் படத்திற்கு ரஹ்மான் இசை எனத் தெரிவித்தபோது, தேவா எந்தத் தவறான எண்ணமும் கொள்ளாமல் தன் கையைப் பிடித்து “தாராளமாக செய்யுங்கள்” என்று ஊக்கமளித்ததாக ரஜினிகாந்த் கூறினார். தன்னுடன் மூன்று படங்கள் செய்ததே பெரும் பாக்கியம் என தேவா சொன்னதாகவும் அவர் தெரிவித்தார்.
கள்ளம் கபடமில்லாத மனிதர் என தேவாவை வர்ணித்த ரஜினிகாந்த், அவரின் ஆரம்ப வாழ்க்கை கடினமானது என்றும், ஐந்து சகோதரர்களில் மூத்தவராக தெருத்தெருவாகவும் கல்யாண நிகழ்ச்சிகளிலும் கச்சேரி செய்து குடும்பத்தை காப்பாற்றியதாகவும் கூறினார். திரையுலகில் பெரிய இடத்தை அடைந்த பின்னரும் சகோதரர்களை விட்டுக்கொடுக்காமல் அருகில் வைத்துக் கொண்டிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்திலும் தனக்கென தனி பாணியை உருவாக்கி வெற்றி பெற்றவர் தேவா என ரஜினிகாந்த் கூறினார். பின்னர் இசை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்ததாகவும், சமீபத்தில் இளைய தலைமுறையினர் தன்னை வரவேற்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். இறுதியில், தேவாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென பிரார்த்தித்து, குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.





